Wednesday, July 14, 2010

தஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்

வெள்ளை பிள்ளையார்


அரசன் விஜயராகவா நாயகர் வைணவான காரணத்தால் சைவ உருவாகிய பிள்ளையே வழிபாட்டுக்கு தடைவிதிப்பார் எனக்கருதி, அதற்குப் பதிலாக, ஒரு வெல்ல அச்சினை வைத்து வணங்கி தன பணியினை மேற்கொண்டாராம் இதனை அறிந்த அரசன் அதனை அகற்ற முயன்றபோது அவ்வுரு இப்போது இருக்கும் உருவாக மாறியதாகவும் அதனால் அதற்கு "வெல்ல பிள்ளையார் " என்று பெயரிடதாகவும், அது "வெள்ளை பிள்ளையார் " என்று ஆனது என ஒரு கர்ண பரம்பரை செய்தி இருக்கிறது.இந்நகரில் எல்லையில் அமைக்கப்பட்டதால்
இதற்கு "எல்லை பிள்ளையார்" என்று பெயரிட்டு, அது கால வழக்கில் வெள்ளை பிள்ளையாராக மாறியதாகவும் கூறுவர்.

"வல்லப்பை" என்ற அம்பிகையோடு காட்சியளிபதாள் இவருக்கு "வல்லபைப் பிள்ளையார்" என்று பெயருண்டாயிற்று. அது கால போக்கில் "வெள்ளை பிள்ளையார்" பிள்ளையார் மட்டும் கருவறைக் கடவுளாக காட்சி அளிக்கிறார். வல்லபைக்குக் கருவறை உருவம் இல்லை. இதை நுலாசிரியார்


"வனக்கிளியே தஞ்சைவெள்ளை வாரனத்தார் நாளை
வலிமையிலே அசுரர்பெண்ணை மணம்புணர் வா ரம்மே "

கருடங்கோட்டை

தஞ்சாவுருக்கு கருடங்கோட்டை என்ற ஒரு பெயர் உண்டென்பர். இவ்வூர் ஒரு கருடப்பறவை உருவில் அமைக்கப்பட்டதேன ஒரு காரணமும், இந்த கோட்டைக்குள் ஒருவருமே பாம்பு கடித்து இறந்ததில்லை. அப்படி இறக்க நேரிட்டாலும் தெய்வச் செயலாக அவர்கள் கோட்டைக்கு வெளியிலே சென்று இறப்பர் என்ற காரணமும் கூறுவர்.

புன்னைநல்லூர் .

பழையபெயர் : புன்னைவனம்

வரலாறு :

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728 1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

வடுவூர்

இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டைமண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர்
எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.

திருவையாறு

இந்த புனிதத் தலம் திருவையாறு எனப் பெயர் பெற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தலத்தைப் பஞ்சநதம் என்று அழைப்பதோடு, இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் அல்லது ஐயாறப்பர் எனப் பெயர் விளங்குவதாலும் இங்கு பாயும் ஐந்து நதிகளையொட்டியே இந்தப் பெயர் வந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே இவ்வாறுகள் முறையே வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் இவற்றையொட்டியே இந்தப் பெயர் வந்ததாகக் கருதலாம். இத்தலத்தின் பெயரே இங்கு கோயில் கொண்டுள்ள இறைவருக்கும் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்தின் தலபுராணப்படி சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை எனப்படும் நந்திதீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் இங்கு கலப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் செய்திகள் உண்டு. 'ஐயாறு' எனும் சொல்லுக்கு அகன்ற ஆற்றையுடைய ஊர் என்ற தெளிபொருளும் உண்டு. இதன்பொருட்டே

நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு
நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் ...

என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார்.

திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது.

இத்திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பெற்று நமக்குக் கிடைக்ககூடிய நூல்கள் அனைத்துமே சைவ இலக்கியங்கள்தான். தேவாரம் பாடிய மூவர் காலம் முதல் இன்றுவரை இத்தலம் மிகச் சிறந்த சைவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலைத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பெருமானும் 'திருவாசகம்' கீர்த்தித் திருவகவலில் "ஐயாறதனில் சைவனாகியும்" என்று இங்கு சிவபெருமான் தனக்கு பூசை செய்யும் ஆதிசைவர் காசிக்குச் சென்றிருந்தபோது அவர் உருவில் வந்து தனக்கே பூசித்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்
[Image1]

தல வரலாறு:

குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் "தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார்.

ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.

இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு "தஞ்சவூர்' என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் "தஞ்சாவூர்' ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

மூலை அனுமார் கோயில்


தஞ்சாவூரில் மேல ராஜவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில் வாயுவின் மைந்தனுக்கு வாஸ்துப்படி தஞ்சை மன்னனால் கட்டப்பட்டது ஸ்ரீபிரதாப வீர அனுமார் திருக்கோயில். இக்காரணத்தினாலேயே பக்தர்கள் பலகாலமாக "மூலை அனுமார் கோயில்' என்று இவ்வாலயத்தை அழைத்து வருகின்றனர். தற்போது அப்பெயரே நிலைத்துவிட்டது.

.
அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்
[Image1]
தல வரலாறு:
பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ""எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

கருந்திட்டைக்குடி /கரந்தை

பெரிய கோயிலுக்கு முன்னரே கட்டப்பட்ட கோயிலில் எழுதருளியிருக்கின்ற கருந்தட்டன்குடி கருணாமூர்த்தி இவர் கருகுட்டம் தீர்த்த இறைவன் அதனாலே கருந்தட்டன்குடி, கருந்திட்டைகுடி, என்றெல்லாம் அழைக்கப்பட்டதாக
தஞ்சை வெள்ளை பிள்ளையார் குறவஞ்சி நூலில் குறிப்பிட்டு உள்ளனர். தற்போது இந்த பகுதி கரந்தை என்றி அழைக்கபடுகிறது

தொப்புள் புள்ளையார் கோயில்

நாணயக்கார செட்டித்தேருவின் கிழக்கே உயர்ந்த இடத்தில இருக்கிறது . தொப்ப்பைக்கு ஆரம் கேட்ட பிள்ளையார், தொப்பாரன்கட்டிப் புள்ளையார் என்ற வார்த்தை மருவி தொப்புள் புள்ளையார் கோயில் என்று ஆகி விட்டது

களிமேடு

கொண்டிராஜபாளையம் ரகுநாதப்பெருமால்(நரசிம்மப்பெருமாள்) கோயிலின் திண்ணையில் கடைவைத்து இருந்த "பெத்ததாசர்" என்பவர் வைணவப்பற்று மிக்கவர். இந்தக்கடவுளை இடையறாது பூசித்து வந்தாராம். திருநாமம் தரித்து வந்தவர்களை கண்டவுடன் எழுந்து அவர்களை வலம் வந்து வணங்கிவிட்டு பிறகு தான் தன் செயலை மேற்கொள்வாராம் அது கேட்டு அக்கால அரசர் அவரை பரிகாசிக்க எண்ணித் தன் அரசவையில் இரண்டு கழுதைகளை கொணர்ந்து ஒன்றிற்கு திருமண் அணிவித்து, மற்றொன்றை வெறும் நெற்றியோடு நிறுத்திக்கொண்டு பெத்தராசரை அழைத்துவரச் சொன்னாராம்.அவர் வந்து திருமண் தரித்த கழுதையினை வலம்வந்து, விழுந்து வணங்கி எழுந்து அரசரது ஏவலுக்குக் காத்திருந்தாராம்.

"இந்தக் கழுதையினை ஏன் வணங்கவில்லை" என்று கேட்ட அரசருக்கு "இது (திருமண் தரிகாதது) உன்னை ஒத்த கழுதை, அது(திருமண் தரித்தது) என்னை ஒத்த கழுதை" என்று பதிலளிக்கவே கோபம் கொண்ட அரசர் இவரைக் கழுவேற்றப் பணித்தாராம்.

தஞ்சைக்கு மேற்கே சுமார் மூன்று கல் தொலைவில் உள்ள ஒரு மேட்டில் இருந்த கழுவருகில் இவர் அழைத்துச் சொல்லப்பட்டாராம், இவரை அழைத்துச்செல்லும்போது இவர் வழிநெடுகிலும் "நரசிம்மா""நரசிம்மா"
என்று இப்பெருமானின் பெயரையே சொல்லிக்கொண்டு சென்றாராம் கழுமரத்தை அணுகியதும் கழுமரம் தீப்பற்றி எரிந்ததாம்.அதுகண்ட அரசர் " என்னை கோபிக்காமல் இக்கழுமரத்தை எரித்தது என்மீதுள்ள இரகத்தினால்தான் என்று சொல்லி இவர் கால்களில்விழுந்து வணங்கினாராம் மற்றுமுள்ள எல்லாரும் வணங்கினார்களாம் பிரகலாதனை காத்த இறைவன் என்னையும் அவ்வழியிலேயே காப்பாற்றினார் என்று கூறினார்.

இவரை கழுவேற்ற இருந்த பகுதியை இவருக்கு இனாமாக வழங்கியதாக கூறுவர்.இவரை கழுவேற்ற அமைத்த மேடு "களிமேடு " ஆயிற்றேன்பர்.கழுதை காரணமாக இவருக்கு கொடுக்கப்பட்ட மேடு "கழுதை மேடு " ஆது களிமேடாயிற்று " என்பர்.
1 comment:

  1. வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், this reason is very very new to me. i had nt even heard abt it. while reading i felt like watching "theiveega neram" in Sun TV.

    ReplyDelete