Friday, July 15, 2011

சிவகங்கை குளம்-ஐயன் குளம்

சிவகங்கை குளம்

தஞ்சையில் பெரியகோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள சிவகங்கை பூங்காவில் அமைந்துள்ள குளம்தான் இந்த சிவகங்கை குளம். சிதம்பரத்தில் உள்ள ஒரு புனிதம் வாய்ந்த குளத்திற்கும் இதே பெயர் உள்ளது. இந்த சிவகங்கை குளத்திற்கு என்ன அப்படி ஒரு விஷேசம், இதை இங்கே பதிவதற்கு என்ன காரணம் என்று சற்று பார்ப்போம்.

பொன்னியின் செல்வனில் தஞ்சை தளிக்குளத்தார் ஆலயம் என்று ஒரு ஆலயத்தை படித்திருக்கிறோம் அல்லவா, அந்த ஆலயம் எங்குள்ளது என்று தேடினேன். அவ்வாறு தேடும் பொழுது உள்ளூர்வாசிகள் பலரிடம் விசாரித்தேன், அப்பொழுது ஏராளமானோர் காட்டியது இந்த சிவகங்கை குளத்தையும் அதனுள் இருக்கும் சிவலிங்கத்தையும், நந்தியையும் தான். இது உண்மையா என்று பல நூல்களில் தேடிப்பார்த்தேன், ஆனால் எதிலும் குறிப்பேதும் கிடைக்கவில்லை. சரியான நூலை நான் தேடவில்லையோ என்னவோ! ஆனால் இணையத்தில் தேடியதில் இரண்டு வலைத்தளங்களில் உள்ள செய்தி இதை உறுதி செய்தன, அவற்றை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்.

http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_thanjaithalikkulam.htm

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37
அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே

பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவ ராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி, வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.


இதுதான் தளிக்குளத்தைப் பற்றி அப்பர் பெருமான் பாடிய பாடலும் அதன் விளக்கமும். சரி வாருங்கள் சிவகங்கை குளத்தையும் அதில் இருக்கும் சிவாலயத்தையும் பார்க்கலாம்.

இதோ சிவகங்கை குளத்தில் உள்ள ஆலயம், தளிக்குளத்தார் ஆலயமா?



இந்தப் படங்கள் பெரியகோவிலின் பக்கம் இருந்து எடுக்கப் பட்டவை


சிவகங்கை குளத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட பெரியகோவிலின் படம்



தளிக்குளத்தார் ஆலயத்தின் மறுபுறத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். குளத்தின் நடுவே இருக்கும் பாறையை பாருங்கள், செங்குத்தாக வெட்டியதுபோலல்லவா இருக்கிறது.


சிவகங்கை குளத்தின் மதில் சுவர்கள்...

இது உபயோகப்படுத்தப் படாத படித்துறை...


சிவகங்கை குளத்தின் வடமேற்குப் பகுதி...அப்பப்பா எவ்வளவு உயரமான சுவர்! உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் செங்கல்களில் வித்தியாசத்தைப் பாருங்கள். மேற்குப் பகுதியில் உள்ள செங்கற்கள் தற்கால செங்கல் போலுள்ளன, ஆனால் வடக்குப் பகுதியில் உள்ள செங்கல்கள் பழங்காலத்தில் உபயோகப் படுத்தப் பட்ட சிறியவகை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

இது வடக்குப் புற சுவர்...(A massive retaining wall)


வடகிழக்குப் பகுதி...


மேற்குப் பகுதி சுவர்...

வடக்குப்புற சுவரில் ஒரு நீண்ட ஏணியும் அதில் வேலை செய்யும் ஆட்களும் தெரிகிறார்களா? எவ்வளவு பெரிய சுவர் என்று கற்பனை செய்து பாருங்கள்.


அட! இது என்ன படித்துறையா? நிச்சயமாக அந்த காலத்துப் படித்துறையாகத்தான் இருக்கவேண்டும். இதில் மன்னரும் அவர்தம் மக்களும் இறங்கி விளையாடி இருப்பார்களா? இல்லை இறைவன் இருக்கும் குளமென்பதால் புண்ணிய காரியங்களுக்கு மட்டும் உபயோகப்படுத்தி இருப்பார்களா!

இந்தக் குளத்தில் தற்சமயம் நீருள்ள காலத்தில் படகுசவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சுற்றுலாத் துறையினரால். மேலும் விஞ்ச் எனப்படும் தொங்கு வாகனம் இங்குள்ள சிவாலயத்திற்கு எல்லா நாட்களிலும் இயங்குகிறது. எது எப்படியோ, இதுதான் தளிக்குளத்தார் ஆலயமா என்பது என்னால் உறுதி செய்ய முடியவில்லை. இந்த தேடலில் தாங்களும் இணைந்து கொள்ளலாமே!

ஐயன் குளம்
இந்த சிவகங்கை குளம் மற்றும் தளிக்குளத்தைப் பற்றிய தேடலில் கிடைத்தது தான் இந்த ஐயன் குளம். ஐயன் குளம் என்ற பெயர் எவ்வாறு வந்தது தெரியுமா? தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்த பொழுது, செவப்ப நாயக்கன், அச்சுதப்ப நாயக்கன் மற்றும் விஜய் ரெகுநாத நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராய் இருந்து அரும்பணியாற்றியவர் கோவிந்த தீட்சிதர். இவரை யாவரும் கோவிந்தய்யா என்று அழைப்பார்களாம். விஜய ரெகுநாத மன்னருக்கு அமைச்சராகவும், அரச குருவாகவும், நல்ல ஆலோசகராகவும் பணியாற்றிய கோவிந்தய்யாவின் பணிகளை பாராட்டி அம்மன்னன் அவர் பெயரில் கோவிந்தகுடி, கோவிந்த புத்தூர், ஐயன் பேட்டை, ஐயன் கடைவீதி, ஐயன் குளம், ஐயன் வாய்க்கால் என பலவற்றையும் ஏற்படுத்தினாராம். அதில் ஒன்றுதான் இந்த ஐயன் குளம்.

சரி, இந்த ஐயன் குளத்திற்கும் சிவகங்கை குளத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களல்லவா, சிவகங்கை குளத்தில் நீர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நிறைந்தால் அந்த நீர் ஐயன் குளத்திற்கு செல்வது போல் நிலத்தடி வாய்க்கால் (may be syphon action) வெட்டப்பட்டதாம் அந்த காலத்தில். இதோ என் நண்பர் தஞ்சை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இராஜவர்மன் அவர்கள் அளித்த ஐயன் குளத்தின் படங்களை பார்ப்போம்.


ஒருவேளை இந்த நடுவில் இருக்கும் குழிதான் சிவகங்கை குளத்துக்கும், ஐயன் குளத்துக்கும் இணைப்பு தருகிறதோ...



கீழிருக்கும் படத்தில் மூலையில் துளை போல் ஒன்று நீட்டிக் கொண்டிருக்கிறதே அது தெரிகிறதா?

இப்பொழுது பாருங்கள்...


இப்பொழுது பாருங்கள்... அட இதென்ன நந்தி ஒன்று வாய்திறந்துகொண்டு இருப்பது போலல்லவா தெரிகிறது! உண்மைதான் மழைக்காலத்தில் நீர்பிடிப்பு பகுதியிலிருந்து வரும் நீர் இந்த துளையின் வழியாகத்தான் வரும் இந்த குளத்திற்கு. யார் கண்டது, ஒருவேளை சிவகங்கை குள நீர் கூட இதன் வழியாக வரலாம் அல்லவா? ஏனென்றால் இந்தக் குளம் இருக்கும் பகுதி சிவகங்கை குளத்தை விட தாழ்வான பகுதியில்தான் அமைந்துள்ளது.

மேலும் சீனிவாசநகர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய ஏரியோ அல்லது குளமோ இருந்ததாகவும் அதன் அருகில் ஒரு சிவாலயமோ அல்லது விஷ்ணுவின் ஆலயமோ இருந்ததாக என் நண்பனின் பாட்டி கூறினார். இது பற்றியும் மேலும் தேடி வருகிறேன், தங்களுக்கு இதைப் பற்றி ஏதும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நூல் குறிப்பு: தமிழர் காசு இயல், நடன் காசிநாதன்

சிவகங்கை குளத்தைக் காட்டும் கூகுள் வரைபடம்


3 comments:

  1. என் குழந்தை பருவத்தில் நீச்சல் கற்றுக் கொண்ட இடம்.மேற்கு கரையின் பக்கத்தில் எங்கள் வீடு.சிறு வயதில்.தற்கொலை செய்து கொண்டவர்களின் சடலம் ஜன்னலுக்கு அருகே கிடத்தப்பட்டிருக்கும்.அந்த அறையின் ஜன்னல் திறக்கவே முடியாதது

    இப்பொதும் நினைவுக்கு வருகிறது.நல்ல தகவல்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான நினைவு. உண்மை தான் இது தஞ்சையின் sucide point

      Delete